மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் 13 டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால் ஜூன் மாதத்தில் பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. பாசனத்துக்காக நீர் திறக்க அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். இந்நிலையில், நேற்று அணையின் நீர்மட்டம் 91.15 அடியாகவும், நீர் இருப்பு 53.97 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணைக்கு 11,501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து, இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்த முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூருக்குச் சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேட்டூர் அணையை சென்றடைந்த முதல்வர் விஜய், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீரை திறந்து வைத்தார். இதன் மூலம் டெல்டா பகுதிகளில் உள்ள சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெறும்.
முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு மேட்டூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏடிஜிபி அன்பு தலைமையில் 3,804 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
