போலி பதிவுகள் மற்றும் டீப்பேக் உள்ளடக்கங்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லியில் மத்திய அரசு மற்றும் மெட்டா அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற தொழில்நுட்ப ரீதியான ஆலோசனையில், சமூக வலைதளங்களில் போலி மற்றும் விதிமீறல் உள்ளடக்கங்களை கண்டறிவதில் அல்காரிதம் தொடர்பான சில குறைபாடுகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகும் டீப்பேக் உள்ளடக்கங்கள் மற்றும் சட்டவிரோத போலி பதிவுகளை கண்டறிந்து அகற்றும் வகையில், தனது அல்காரிதம்களை மேம்படுத்துமாறு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இந்திய சட்டங்களை பின்பற்ற உத்தரவு
இந்தியாவில் செயல்படும் அனைத்து டிஜிட்டல் தளங்களும் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்வதற்கான விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டா நிறுவனத்திடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் விதிமீறல் விளம்பரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே நோட்டீஸ் மற்றும் சம்மன்களை அனுப்பி வந்த நிலையில், தற்போது டீப்பேக் மற்றும் போலி உள்ளடக்கங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போலி உள்ளடக்கங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை
டீப்பேக் வீடியோக்கள் மற்றும் போலி பதிவுகளை கண்டறிந்து அகற்றும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்றும், இதற்காக அரசுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் மெட்டா நிறுவன அதிகாரிகளிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இதுபோன்ற போலி மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும் அரசு வலியுறுத்தியுள்ளது.
