சென்னை: மதத்தை உயர்த்திப் பேசுவதற்காக தமிழ் மொழியை தாழ்த்திப் பேசியதாக கூறி, அமைச்சர் மரிய வில்சனுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மொழி குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சனின் மொழியாற்றல் தொடர்பாக விவாதம் நடைபெற்றபோது, “என் மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்று அவர் கூறியிருந்தால், அது அவரது தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே இருந்திருக்கும்.
ஆனால், “என் மதம் எனக்கு கற்றுக் கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாது” என்று அமைச்சர் சட்டசபையில் கூறியிருப்பது, தமிழ் மொழியை தாழ்த்திப் பேசும் வகையில் இருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மேலும், பல்வேறு மதங்கள் ‘அன்பு’ என்ற சொல்லுக்கு வழங்கியுள்ள கருத்துகளை, “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்ற ஒரே வரியில் வெளிப்படுத்தும் சிறப்பு தமிழ் மொழிக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிறப்பால் ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், உணர்வால் அனைவரும் தமிழர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது மதத்தை உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை என்றும், அதற்காக தமிழ் மொழியை தாழ்த்திப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, உணர்ச்சி மிகுதியால் தமிழ் மொழி குறித்து தெரிவித்த தவறான கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
