கோவை: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மற்றும் ராம்ராஜ் காட்டன் சார்பில் கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற ‘கோவை சுதேசி எக்ஸ்போ மற்றும் உணவுத் திருவிழா’ நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற புத்தகத்தை அண்ணாமலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாட்டுக்காக உயிரை துச்சமாக கருதி பணியாற்றிய வீரர்களை நினைவுகூர்ந்த அவர், அவர்களின் தியாகம் பெருமைக்குரியது என்றும் தெரிவித்தார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடைபெற்றபோது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான தகவல்களைவிட, மேஜர் மதன்குமார் தனது யூடியூப் சேனல் மூலம் வழங்கிய விளக்கங்கள் பொதுமக்களுக்கு தெளிவாக புரியும் வகையில் இருந்ததாகவும் அண்ணாமலை கூறினார்.
ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக வலிமை குறைந்திருந்த இந்தியா, தற்போது ஆப்பரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறிய அண்ணாமலை, நாட்டின் ராணுவ திறன் மற்றும் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இன்றைய இளைஞர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும், அவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதுடன் தேசப்பற்று உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் உறுதியாக இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
