லண்டன்: இந்திய விமானப்படையில் தகுதி பெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக பயிற்சி அளிக்கும் இந்தியர்கள்
இந்திய விமானப்படை வரலாற்றில் முதன்முறையாக, அதன் தகுதி பெற்ற பயிற்றுநர்கள் பிரிட்டனில் அந்நாட்டு அதிவேக ஜெட் போர் விமானிகளை பயிற்றுவிக்க உள்ளனர்.
வேல்ஸில் உள்ள ராயல் விமானப்படை தளத்தில் பணியாற்றும் இந்த 3 இந்திய பயிற்றுநர்களும், பிரிட்டன் விமானிகளுக்கு ஜெட் ரக விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சிகளை வழங்க உள்ளனர்.
இந்திய விமானப்படை பயிற்றுநர்கள் அங்கு 2 ஆண்டுகள் பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்
பிரிட்டன் விமானப்படை அதிகாரிகளின் கீழ் பயிற்சி பணிகளை மேற்கொண்டாலும், இந்த 3 இந்திய பயிற்றுநர்களும் தொடர்ந்து இந்திய விமானப்படையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழேயே செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தின் மூலம் பிரிட்டனின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று முக்கிய ராணுவ அமைப்புகளிலும் இந்திய அதிகாரிகள் பயிற்றுநர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்தியா – பிரிட்டன் உறவில் முக்கிய மைல்கல்
இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் தகுதி பெற்ற 3 பயிற்றுநர்கள், ராயல் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக வேல்ஸில் உள்ள விமானப்படையில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் இந்தியா – பிரிட்டன் இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
