இந்தியாவிலேயே தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்
புதுடெல்லியில் நடைபெற்ற 10-வது இந்தியா மொபைல் காங்கிரஸ் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, இந்தியா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையை (IP) இந்தியாவிலேயே உருவாக்கும் நாடாக முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலையிலிருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிலைக்கு முன்னேறி வருவதாகவும், தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு இந்தியாவில் உருவாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டீப்ஃபேக் வீடியோக்களுக்கு உலகளாவிய கட்டமைப்பு தேவை
டீப்ஃபேக் வீடியோக்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். டீப்ஃபேக் மூலம் உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ள உலகளாவிய அளவில் ஒரு கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் கூறினார். தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதும் முக்கியம் என வலியுறுத்தினார்.
இந்தியாவில் வேகமாக வளரும் கேமிங் துறை
இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு தொடர்ந்து விரிவடைந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இன்று மொபைல் போன்கள் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கான சாதனமாக மட்டும் இல்லை என்றார்.
மொபைல் போன் தற்போது கேமிங் கன்சோலாகவும், படைப்புகளை உருவாக்கும் ஸ்டுடியோவாகவும் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மலிவான டேட்டா மற்றும் வேகமான இணைப்பு காரணமாக, இந்தியாவில் உள்ளடக்க உருவாக்கமும் பரவலாக வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் அதிகரிக்கும் சேவைகள்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குழந்தைகள் தொடர்ந்து கற்கவும், மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருக்கவும், தொலைதூரப் பணிகளை மேற்கொள்ளவும் முடிகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும், மொபைல் தொழில்நுட்பம் பயண நேரம், காத்திருப்பு நேரம் மற்றும் செலவைக் குறைத்து, மக்களுக்கு வேகமான மற்றும் வசதியான சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
போலி செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
பயனர்கள் போலி செய்திகள், மோசடி செய்திகள் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், தொலைபேசி மற்றும் நெட்வொர்க் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புறங்களிலும் மொபைல் இணைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை
தொலைதூரப் பகுதிகளில் மொபைல் டவர்கள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மொபைல் டேட்டா மற்றும் டிஜிட்டல் சேவைகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் மொபைல் போன் மூலம் மக்களை நேரடியாக சென்றடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
