இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, அவரது மனைவி மற்றும் சகோதரி சுமார் 9 மாதங்களுக்கு பிறகு சிறையில் சந்தித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
ஊழல் வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இம்ரான் கான் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் மரணப் படுக்கையில் இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, அவரை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிபா மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் வாரந்தோறும் சந்திக்கவும், அவரது மகன்களுடன் தொலைபேசி மூலம் பேசவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சுமார் 9 மாத இடைவெளிக்குப் பிறகு இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது சகோதரி நொரீன் நியாசி ஆகியோர் அடியலா சிறைக்கு சென்று அவரை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சந்திப்பின்போது, இம்ரான் கானை ஷிபா மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அவரது சகோதரி நொரீன் நியாசி விளக்கம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்ரான் கானுடன் சில சட்ட விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
