ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த இரண்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற எம்டி எல் பஹியாக் மற்றும் எம்டி மோம்பஸா கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஈரான் துணைத்தூதருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி, இந்தியாவின் கடுமையான எதிர்ப்பை நேரில் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடல் பணியாளர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற சர்வதேச கடல்வழிகளில் பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேற்காசியாவில் மீண்டும் தீவிரமடைந்து வரும் மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள இந்தியா, வன்முறையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிகளின் மூலம் அமைதி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த அனைத்து தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
