ஹார்முஸ் ஜலசந்தியில் மிதக்கும் ஐபோன்கள்: போட்டி போட்டு அள்ளிச் செல்லும் மக்கள்
டெஹ்ரான்: அமெரிக்கா–ஈரான் மோதலுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாகவும், அதில் கொண்டு செல்லப்பட்ட விலையுயர்ந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட கடல் வழித்தடங்களை மீறி வரும் கப்பல்களைத் தாக்குவதற்காக ஈரான் கடலில் கன்னிவெடிகளைப் பதித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ‘ஜிஎப்எஸ் பிரைட்’ என்ற சரக்குக் கப்பல் அதில் சிக்கியதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட 2,500 கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இருந்த விலையுயர்ந்த ஐபோன்கள் மற்றும் வாசனை திரவியப் பாட்டில்கள் தண்ணீரில் மிதந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, படகுகளில் அங்கு வந்த சிலர் கடலில் மிதந்த பொருட்களைப் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இந்தச் செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
