மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் கட்டாய மத மாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மனிதவள (HR) மேலாளர் நிடா கானுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இந்த வழக்கில் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த மனிதவள மேலாளர் நிடா கானும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜாமின் கோரி நிடா கான் நாசிக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.ஜி. ஜோஷி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, நிடா கான் கர்ப்பிணியாக இருப்பதால் மனிதாபிமான அடிப்படையில் ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
அதேவேளை, இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டேனிஷ் ஷேக் தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
