2026 FIFA உலகக் கோப்பை ‘ஜே’ பிரிவு லீக் போட்டியில் அல்ஜீரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியின் 36-வது நிமிடத்தில் நிஷார் அல் ரஷ்தான் கோல் அடித்து ஜோர்டானை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் 69-வது நிமிடத்தில் ரியாத் மஹ்ரெஸின் கார்னரை நாதிர் பென்புவாலி தலையால் கோலாக மாற்றி அல்ஜீரியாவை சமநிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அமீன் குயிரி வெற்றிக்கான கோலை பதிவு செய்ததால் அல்ஜீரியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
2014 உலகக் கோப்பைக்கு பிறகு அல்ஜீரியாவுக்கு கிடைத்த முதல் உலகக் கோப்பை வெற்றி இதுவாகும். மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் முதலில் கோல் விட்டுக்கொடுத்த பிறகு வெற்றி பெற்ற முதல் போட்டியாகவும் இது அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் அல்ஜீரியா நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மறுபுறம், தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்த ஜோர்டான் அணி நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது.
