உக்ரைன் காலை வாரினார் எலான் மஸ்க்: ஸ்டார்லிங்க் இணையச் சேவை வேகம் குறைப்பு
கீவ்: ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் ஸ்டார்லிங்க் இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போரின் தொடக்கத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. ஆனால், தற்போது அமெரிக்கா ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டி வருகிறார். உக்ரைனுக்கான உளவுத் தகவல் பகிர்வையும் அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க் உத்தரவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மணிக்கு 160 கி.மீ. (100 மைல்) வேகத்தைக் கடந்து செல்லும் ராணுவச் சாதனங்களுக்கான இணைய இணைப்பில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஸ்டார்லிங்க் சேவையைச் சார்ந்திருந்த உக்ரைன் ராணுவத்தின் செயல்பாடுகள் இதனால் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதால் ஏற்பட்ட அதிருப்தியே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் ஸ்டார்ஷீல்டு (Starshield) சேவை அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் வேகக் கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை அமெரிக்க ராணுவமும் அதிபர் டிரம்புமே தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஸ்டார்லிங்க் இணையச் சேவையின் வேகத்தைக் குறைக்க உத்தரவிட்டது யார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அதுகுறித்து அறிந்துகொள்ள விரும்புவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
தடையற்ற ஸ்டார்லிங்க் இணையச் சேவையை மீண்டும் வழங்குமாறு அமெரிக்க அரசுக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கும் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராகப் போராடும் உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடு அமைந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
