தமிழக கோயில்களுக்கு சென்ற 5 யானைகள்
அசாமில் இருந்து தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு 5 வளர்ப்பு யானைகள் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீண்டும் அசாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அசாம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
துர்கா, ஹீராலால், சிவா, ரூப்சிங் மற்றும் பிஜூலி ஆகிய 5 யானைகள் தமிழக கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு யானைகள்
இதில் துர்கா யானை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், ஹீராலால் மற்றும் சிவா யானைகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், ரூப்சிங் யானை வைத்தீஸ்வரன் கோயிலுக்கும், பிஜூலி யானை காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றில் 5 வயதான துர்கா யானை ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துள்ளது.
“யானைகள் எப்படி இடமாற்றம் செய்யப்பட்டன?”
இந்த விவகாரம் தொடர்பாக அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
5 யானைகளும் நன்கொடையாக வழங்கப்பட்டனவா அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டனவா என்பதை அசாம் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பணப் பரிமாற்றம் நடைபெற்றிருந்தால் எவ்வளவு தொகை கைமாறியது என்பதையும் அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜாய்மாலா யானை விவகாரத்தை சுட்டிக்காட்டி கோரிக்கை
தமிழகத்தில் இருந்த ஜாய்மாலா யானை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக கவுரவ் கோகோய் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சூழலில், அசாமில் இருந்து மேலும் 5 யானைகள் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜாய்மாலா உள்ளிட்ட யானைகள் தொடர்பான விவகாரத்தில் அசாம் அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே சட்டரீதியான பிரச்சினைகள் ஏற்கனவே எழுந்துள்ளன.
5 யானைகளையும் திரும்பப் பெற வேண்டும்
இதையடுத்து, தமிழக கோயில்களுக்கு வழங்கப்பட்ட 5 யானைகளையும் மீண்டும் அசாமுக்கு அழைத்து வர வேண்டும் என அசாம் அரசிடம் கவுரவ் கோகோய் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், 5 யானைகளின் இடமாற்றத்தைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் பெறப்படவில்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்படாத நிலையில் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என கவுஹாத்தி உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அசாம் அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
