டெல்லி ராம்லீலாவில் ராவணனுடன் 30 அடி கரப்பான்பூச்சி உருவ பொம்மையும் எரிப்பு
புதுடெல்லி: டெல்லியில் நடைபெறவுள்ள தசரா விழாவின்போது, ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் ராம்லீலா நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி இந்த முடிவை எடுத்துள்ளது.
கரப்பான்பூச்சி உருவ பொம்மை ஏன்?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், கரப்பான்பூச்சி உருவம் அரசியல் எதிர்ப்பின் குறியீடாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிப்பது குறித்து ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரப்பான்பூச்சி அழுக்கு மற்றும் அசுத்தத்தைக் குறிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா, தூய்மை டெல்லி போன்ற பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீமையின் மீது நன்மை வெற்றி பெறுவதை எடுத்துரைக்கவும் இந்த உருவ பொம்மை எரிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபியினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் கரப்பான்பூச்சி உருவ பொம்மை எரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அந்தக் கமிட்டியின் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல், கரப்பான்பூச்சி உருவ பொம்மையை எரிக்கும் முடிவில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களால் வியாபாரம் பாதிப்பு எனப் புகார்
டெல்லியில் நடைபெறும் போராட்டங்களாலும், அவற்றைத் தொடர்ந்து விதிக்கப்படும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளாலும் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்களால் சந்தைகளுக்குச் செல்வதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சிறு வணிகர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக பாலிகா பஜார் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியின் சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது. டெல்லியில் நடைபெறும் போராட்டங்களால் நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரை போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
