சென்னை: ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதன்படி, ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் ரூ.75 ஆயிரம் வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தால் ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த பிறகு இந்த கூடுதல் கடன் தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
2.38 லட்சம் விவசாயிகளுக்கு பயன்
ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38 ஆயிர த்து 264 விவசாயிகளுக்கு, தலா ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி நடவடிக்கையால் தமிழக அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி
தவெக அரசு பொறுப்பேற்ற 15 நாட்களுக்குள், குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50 ஆயிரம் வரையிலான தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய கடந்த மே 25ம் தேதி உத்தரவிடப்பட்டதாகவும் முதல்வர் கூறினார்.
தற்போது விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தள்ளுபடி வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.6,220 கோடி பயிர்க்கடன்
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இதுவரை 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.6,220 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
விவசாய தொழில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும், விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பும் ஆதரவும் வழங்குவது அரசின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
