புதுடில்லி: தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தின் வாதம்
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா முறையாக பின்பற்றவில்லை என தெரிவித்தார்.
இன்றைய நிலவரப்படி கர்நாடக நீர்த்தேக்கங்களில் 76 சதவீத நீர் இருப்பு உள்ளதாகவும், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு 64 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் இதுவரை 14 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகா தரப்பு விளக்கம்
கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.
மேலும், கர்நாடகாவிலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகா தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிட்டதாக கூறுகிறது; அதேநேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வரவில்லை என கூறப்படுவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஒரு வாரத்திற்கு உத்தரவு
இரு மாநிலங்களும் காவிரி நீர் விவகாரத்தில் தற்போதைய நிலவரம் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்ய விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை கர்நாடகா கடைபிடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
