கோவை ஆனைகட்டியில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட 13 ரிசார்ட்டுகள் மூடல்
கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த 13 ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் எண் 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில், யானைகள் வலசை செல்லும் பாதையை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக ரிசார்ட்டுகள் செயல்படுவதாக சமூக ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு முதற்கட்டமாக ஆய்வு செய்து, மொத்தம் 10 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் இரண்டு ரிசார்ட்டுகளுக்கு அனுமதி உள்ளதாகவும், எட்டு ரிசார்ட்டுகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அறிக்கை தாக்கல் செய்தது. அனுமதியின்றி செயல்படும் ரிசார்ட்டுகளை மூடவும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் ரிசார்ட்டுகளின் ஆவணங்களைச் சரிபார்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, வனப்பகுதியில் மொத்தம் 33 ரிசார்ட்டுகள் இருப்பதாக மனுதாரர் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதையடுத்து, அந்தப் பட்டியலில் உள்ள அனைத்து இடங்களையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
33 இடங்களில் ஆய்வு
நகர ஊரமைப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 33 இடங்களிலும் கூட்டாய்வு மேற்கொண்டு ஆவணங்களைச் சரிபார்த்தனர். இதில், நகர ஊரமைப்புத் துறை அனுமதி, ஊராட்சி அலுவலக அனுமதி மற்றும் வனத்துறையின் தடையின்மைச் சான்று உள்ளிட்ட தேவையான அனுமதிகள் இன்றி செயல்பட்ட 13 ரிசார்ட்டுகளும் உரிமையாளர்களால் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், 12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டார்ஸா ரிசார்ட்ஸ், மை வில்லேஜ் ஈகோ டூரிஸ்ட் ரிசார்ட், வைல்டு டோர் கபே ஆகியவை அனுமதி பெற்று செயல்படுவதாகவும், ஐந்து இடங்கள் ரிசார்ட்டுகள் அல்ல; குடியிருப்புகள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்
காரமடை பகுதியில் உள்ள ஆரா ஜங்கிள் ரிசார்ட்டில், அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்துக்கு மாறாகக் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டதாக நகர ஊரமைப்புத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட் நிறுவனம் கட்டட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அந்த வளாகத்துக்கும் மூடல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ரிசார்ட்டுகளை வரன்முறைப்படுத்தக் கூடாது: மனுதாரர்
இதுகுறித்து மனுதாரர் முரளிதரன் கூறுகையில், மூடப்பட்ட 13 ரிசார்ட்டுகள் மற்றும் ரிசார்ட்டுகள் அல்ல எனக் குறிப்பிடப்பட்ட ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வேலிகளை அகற்ற வேண்டும் என்றும், வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாட வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மூடப்பட்ட ரிசார்ட்டுகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும் என்றும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் மூன்று ரிசார்ட்டுகளின் அனுமதி நடைமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த ரிசார்ட்டுகளை வழக்கில் சேர்த்து நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
