26 நகரங்களில் 1,200 கி.மீ. மெட்ரோ வழித்தடங்கள்: இந்தியாவின் மாற்றம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: இந்தியாவில் மெட்ரோ ரயில் கட்டமைப்பு கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த வேகத்திலேயே மெட்ரோ கட்டமைப்பு வளர்ந்திருந்தால், புனே போன்ற நகரங்களில் மெட்ரோ சேவை கிடைக்க இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
2014ஆம் ஆண்டில் இந்தியாவின் 5 நகரங்களில் மட்டுமே மொத்தம் 248 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் இருந்தன. ஆனால், தற்போது 26 நகரங்களில் 1,200 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ வழித்தடங்கள் விரிவடைந்துள்ளன.
தற்போது தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சியின் தாக்கம் வெறும் புள்ளிவிவரங்களுடன் முடிந்துவிடுவதில்லை.
மெட்ரோ சேவையால் போக்குவரத்து நெரிசலில் செலவிடும் நேரம் குறைகிறது. இதன் மூலம் குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு அதிக நேரம் கிடைப்பதுடன், உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. மேலும், மக்களுக்குப் புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன.
நகர்ப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நாங்கள் முன்னெடுத்து வரும் மாற்றம் இதுதான் என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
