ஆதாரம் இருப்பதால் தான் நடவடிக்கை: திமுக முன்னாள் அமைச்சர் கைது குறித்து நிர்மல் குமார் பேட்டி
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் கைது செய்யவில்லை. பள்ளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் மகேஷிடம் வழங்கப்பட்டதாகவும், அந்தப் பணம் எங்கிருந்து, யாரிடமிருந்து, எவ்வளவு வசூலிக்கப்பட்டது, எங்கு வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வசூலிக்கப்பட்ட பணம் கட்சியின் நிதியாகப் பெறப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்சினை தற்போது தொடங்கியதல்ல என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகப் பல புகார்கள் வந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், பல கல்வி நிறுவனங்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாகவும், பணம் வழங்கப்பட்டதற்கான பரிவர்த்தனை ஆதாரங்களும் இருப்பதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து பள்ளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கியதில் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகை தொடர்புடையதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். ஆதாரங்கள் இருப்பதால்தான் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
