ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு: பல ரயில்கள் ரத்து
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இயக்கப்படவிருந்த பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதி என்பதால், சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் ரயிலைக் கவிழ்ப்பதற்காகத் திட்டமிடப்பட்ட சதியா என்றும், இதில் ஈடுபட்டவர்கள் யார் என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வெடிப்பால் சேதமடைந்த ரயில் தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
