சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழு அமைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயிலின் பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் சீர்கேடுகள் தொடர்பான புகார்களைக் களைந்து நிர்வாகத்தை முறைப்படுத்தும் நோக்கில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் இடைக்கால நிர்வாகக் குழுவை அமைத்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கோயில் நிர்வாகத்தின் சுயாட்சியில் தலையிடுவதாகக் கூறி, பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலர் ஜெயசூர்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிர்வாகக் குழு அமைக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
விசாரணையின்போது, கோயிலுக்கு அரசால்தான் பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேவேளையில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தரப்பில் தடை ஏற்படுத்தப்படுவதாக தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
