மசூதி, சர்ச்சுகளுக்கு நிலப்பட்டா வழங்கும் திட்டம்: தமிழக அரசுக்கு பாஜக, ஹிந்து முன்னணி கண்டனம்
சென்னை: உரிய சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நிலப்பட்டா வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பாஜக மற்றும் ஹிந்து முன்னணி அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத ஆயிரக்கணக்கான மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நிலப்பட்டா வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளை மீறும் செயலாகும்.
வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே வழங்குவது திட்டமிட்ட மதவாத நடவடிக்கையாகும். ஆவணங்கள் இல்லாமல் 25 முதல் 50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சட்டவிரோதக் கட்டடங்கள் குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் உரிமையை வழங்க அரசு தயாராகி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுச் சொத்துகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதக் கட்டமைப்புகள் கோவில்களாக இருந்தாலும், மசூதிகளாக இருந்தாலும் அல்லது தேவாலயங்களாக இருந்தாலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் பலமுறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோவில் நிலங்களை மீட்கும்போது இந்து மதக் கட்டமைப்புகளுக்கு வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் பட்டா வழங்க முன்வருவது கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.
ஹிந்து முன்னணி கண்டனம்
இதுதொடர்பாக ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உரிய சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு நிலப்பட்டா வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசே, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது எந்த வகையில் நியாயம்? ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும், அங்குள்ள கட்டடங்களை அகற்றவும் நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ளன.
அரசு நிலங்களில் உள்ள இந்துக் கோவில்கள் அகற்றப்படும் நிலையில், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு மட்டும் பட்டா வழங்குவது பாரபட்சமானது. ஏற்கெனவே வக்ஃப் சொத்து தொடர்பான பிரச்னைகளால் கரூர் மாவட்டம் திருச்செந்துறை, ஈரோடு மாவட்டம் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
உரிய ஆவணங்கள் இன்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கும் அறிவிப்பு இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், வாக்கு வங்கி அரசியலுக்காக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
