தமிழகம் – காசி இடையே பல நூற்றாண்டு காலத் தொடர்பு: கவர்னர் அர்லேகர் பெருமிதம்
சென்னை: தமிழகம் மற்றும் காசி இடையே கலாசாரம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய ரீதியாகப் பல நூற்றாண்டு காலத் தொடர்புகள் இருப்பதாக தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி சார்பில், மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஐந்தாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று (நவம்பர் 3) சென்னை ஐஐடியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் ஒருமைப்பாடு குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பேச்சுடன் மட்டும் நின்றுவிடாமல், அதற்கான செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டு மக்கள் அனைவரும் கலாசாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் புவியியல் ரீதியாக ஒன்றோடொன்று தொடர்புடையவர்கள். இந்த உண்மையை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் காசி தமிழ் சங்கமம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே கலாசாரம் மற்றும் ஆன்மிக ரீதியாகப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்புகள் இருந்து வருகின்றன. இந்தியா பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட நாடாக இருந்தாலும், பாரதம் என்ற ஒற்றுமை உணர்வு அனைவரையும் இணைக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி சௌராஷ்டிரம், மகாராஷ்டிரம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் காசியுடன் நீண்டகாலத் தொடர்புகள் உள்ளன.
இவ்வாறு ஆளுநர் அர்லேகர் பேசினார்.
