லிங்கமலையில் சிலுவை வைத்ததாகப் புகார்: இந்து முன்னணி கண்டனம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான லிங்கமலையைப் பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், லிங்கமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளதாகவும், இது மன்னர் அழகிய மணவாள தேவனால் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் கால வரலாற்றுச் சான்றுகளாகக் கருதப்படும் கல்வெட்டுகள், சிற்பங்கள், நந்தி சிலை, பழமையான மண்டபம் உள்ளிட்டவை அங்கு இருப்பதாகவும், இதற்கான ஆதாரங்கள் அரசு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாகப் பொதுமக்களும் பக்தர்களும் பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தி வந்த நிலையில், கோயிலின் தொன்மையையும் கல்வெட்டுகளையும் சேதப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், லிங்கமலை உச்சியில் கிறிஸ்தவர்கள் சிலுவை வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குளத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில், சிலுவை வைப்பது சட்டவிரோதமானது என்றும், அது இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில், சிலுவையைப் பராமரிக்கக் கூடாது, அதை அகற்ற வேண்டும் என்றும், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையின் அனுமதியின்றி இரு தரப்பினரும் அப்பகுதியில் எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிறிஸ்தவர்கள் சிலர் சிலுவையைப் பராமரித்து, அப்பகுதிக்குச் செல்லும் பாதையைச் சுத்தம் செய்தபோது, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தப் பணி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் சிவன் கோயில் அமைந்துள்ள லிங்கமலைக்குள் அத்துமீறி நுழைந்து பழமையான கல்வெட்டுகளைச் சேதப்படுத்துதல், பாதையை மறித்தல் போன்ற செயல்கள் நடைபெற்றதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லிங்கமலை என்ற பெயரைச் சவேரியார் மலை என மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
மலையின் தொன்மையையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரப்பட்டுள்ளது.
