தொகுதி மறுவரையறை விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ் – கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு
புதுடில்லி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கையின்போது எந்த மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்றும், அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக, சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நாகரிகம் மற்றும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட வலிமையான நாடுகள் தீவிர இடதுசாரி கருத்துகளால் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், மத்திய அரசு சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
