சட்டம் ஒழுங்கு பராமரிப்பு முதல் மக்களின் பாதுகாப்பு வரை: போலீசாருக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: தேசிய போலீஸ் நினைவு தினத்தையொட்டி, சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போலீசாரின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், போலீஸ் நினைவு தினம் என்பது பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், குற்றச் செயல்களைத் தடுத்தல், அவசர காலங்களில் விரைந்து செயல்படுதல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளில் போலீசாரின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பணியின்போது தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போலீசாருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
