சொந்த நாட்டின் மீது நம்பிக்கை இழந்த பாகிஸ்தான் அதிகாரிகள்; வெளிநாடுகளுக்குக் குடியேறத் திட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்போது பணியில் உள்ள சில அதிகாரிகள், அமெரிக்கா, போர்ச்சுகல், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நிரந்தரமாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் மூலம், பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாக, இந்தியாவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் பாகிஸ்தான் விவகார நிபுணருமான திலக் தேவாஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பாகிஸ்தானில் ஏதோ தவறாக நடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்தின் மீது மூத்த அதிகாரிகள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “மூழ்கும் கப்பலை விட்டுவிட்டு எலிகள் தப்பியோடுவதைப் போல உள்ளது” என்று அவர் விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியில் இருக்கும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குக் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக போர்ச்சுகல் அவர்களுக்கு விருப்பமான நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிகாரிகள் போர்ச்சுகலில் சொத்துகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளுக்குச் சம்மன் அனுப்ப பாகிஸ்தான் பொதுக்கணக்குக் குழு முடிவு செய்துள்ளது.
