இலங்கைத் தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து
ரியாத்: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் அனோஜன் சிவராசாவுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனோஜன் சிவராசா வேலைக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார். அங்கு சமூக வலைதளத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் பதிவுக்கு மத நிந்தனை செய்வதாகக் கருதப்பட்ட கருத்தைப் பதிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், சிவராசாவுக்கு மரண தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு தூதரக மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் அவரது மரண தண்டனையை ரத்து செய்துள்ளதாக இலங்கை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் தொடர்ச்சியான தூதரக முயற்சிகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த நிவாரணம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசு, இலங்கைத் தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தனியாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளன.
