பாரிஸில் தீவிரமடைந்த மாணவர் போராட்டம்: 375 பள்ளிகள் மூடல்
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு குறைபாடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
375 பள்ளிகள் மூடல்
பிரான்சில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, பழுதடைந்த வகுப்பறைகள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் செப்டம்பர் இறுதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாரிஸில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பாரிஸில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் நுழைவாயிலில் குப்பைத் தொட்டிகளைக் குவித்து மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதியில் பேரணி நடத்தத் திரண்ட மாணவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தனர். அசாதாரண சூழல் காரணமாக நாடு முழுவதும் 375 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6,600-க்கும் மேற்பட்டோர் கைது
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 6,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களுடன் சில அரசியல் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளதால், பல்வேறு இடங்களில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் எச்சரிக்கை
இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கவலை தெரிவித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு சில அரசியல் தலைவர்கள் மாணவர்களின் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
