அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
புதுடில்லி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், டில்லியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி ஆரத்தி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பியூஸ் கோயல் வீட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார்.
உலக அமைதி நிலவவும், நாட்டில் செழிப்பு மற்றும் நல்வாழ்வு பெருகவும் பிரதமர் மோடி விநாயகரை பிரார்த்தனை செய்தார்.
அமித் ஷா பங்கேற்பு
இதேபோல், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
அவருக்கு முதல்வரின் மனைவி ஆரத்தி எடுத்து திலகமிட்டார். தொடர்ந்து, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு அமித் ஷா ஆரத்தி காண்பித்து வழிபட்டார்.
அப்போது துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அமித் ஷாவுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பரிசாக வழங்கினார்.
நாக்பூரில் நிதின் கட்கரி தரிசனம்
நாக்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திலும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டார்.
லால்பாக்சா ராஜாவை தரிசித்த அமெரிக்க தூதர்
மஹாராஷ்டிராவின் மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அங்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேரில் சென்று விநாயகரை தரிசனம் செய்தார்.
