மசூத் அஸார் குறித்து தகவல் அளித்தால் ரூ.24 லட்சம் பரிசு
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை ரூ.24 லட்சமாக உயர்த்தி பாகிஸ்தான் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்கள்
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவராக மசூத் அஸார் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தள தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.
மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வலியுறுத்தல்
2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலுக்குப் பின்னர், மசூத் அஸாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மசூத் அஸார் தங்கள் நாட்டில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதனை ஆப்கானிஸ்தான் அரசு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
2021ல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
இந்த நிலையில், இந்தியாவின் தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னர் 2021ஆம் ஆண்டு பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு மசூத் அஸாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததாக தகவல் வெளியாகியது.
மேலும், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.17.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வெகுமதித் தொகையை ரூ.24 லட்சமாக பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது.
சர்வதேச அழுத்தத்தை சமாளிக்க முயற்சியா?
சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை சமாளிக்கவும், எதிர்காலத்தில் சர்வதேச நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவான FATF-ன் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்கவும் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச அளவில் காட்டிக்கொள்ள பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
