ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாஜக 4,000க்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3,456 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்
ராஜஸ்தானில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் முடிவுகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது.
மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை
இதுவரையிலான நிலவரப்படி, 10 மாநகராட்சிகளில் 5 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 மாநகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது.
ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சமமான எண்ணிக்கையிலான இடங்களைப் பிடித்துள்ளன. பரத்பூர் மாநகராட்சி சுயேட்சை வேட்பாளர்களின் வசம் சென்றுள்ளது.
4,049 வார்டுகளை கைப்பற்றிய பாஜக
மாநிலம் முழுவதும் இதுவரை 403 மாநகராட்சி வார்டுகள் உட்பட மொத்தம் 4,049 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 300 மாநகராட்சி வார்டுகள் உட்பட மொத்தம் 3,456 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், 2,438 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றியை கொண்டாடிய முதல்வர்
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வெற்றியை கொண்டாடினார்.
பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் பாஜக தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
