சென்னை: வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் என உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் அறிவித்தார்.
போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக, வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, நகர்ப்புறங்களில் உள்ள அமுதம் அங்காடிகள், கூட்டுறவு பண்டகசாலைகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படும்.
முதற்கட்டமாக வரும் 3ம் தேதி முதல், நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாயவிலைக் கடைகளில், சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேவை அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதல் அளவு வெங்காயத்தை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
