சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீரை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அணையில் இருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி நீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாக பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
காவிரி மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுப்பது உள்ளிட்ட செயல்கள் தடுக்கப்படும் என்றும், இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் இணைந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் என்றும் கூறியுள்ளார்.
காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் தமிழகத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ள நீர்ப்பங்கில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும், தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும் டெல்டா விவசாயிகளின் உரிமையையும் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மழைப்பற்றாக்குறை மற்றும் எல் நினோ தாக்கத்தை கருத்தில் கொண்டு, குறைந்த நீர் தேவையுள்ள மத்திய கால நெல் ரகங்களை பயன்படுத்துவதுடன், நேரடி நெல் விதைப்பு முறையையும் விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நீரை சிக்கனமாக பயன்படுத்தி, கடைமடை வரை முறையாக பகிர்ந்தளித்து சம்பா சாகுபடியை வெற்றியடையச் செய்வோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
