காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கை தொடர்ந்து, இந்தியா விரைவான மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
நேபாளத்தில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டது குறித்த தகவல் கிடைத்த சில மணி நேரங்களிலேயே, இந்திய விமானப்படையின் சி-130ஜே ரக விமானம் 10 டன் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களுடன் நேபாளம் நோக்கி புறப்பட்டது.
கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8.35 மணியளவில் இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானம், முதல் கட்ட நிவாரணப் பொருட்களை அன்றிரவே நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு கொண்டு சென்றது.
வெள்ளம் ஏற்பட்ட 12 மணி நேரத்துக்குள் இந்தியா மேற்கொண்ட இந்த விரைவான நடவடிக்கை, அண்டை நாடுகளில் பேரிடர் ஏற்படும் நேரங்களில் உடனடியாக உதவும் நாடாக இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களிலும் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பேரிடர்களின்போது இந்தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. துருக்கி, சிரியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளின் தொடர்ச்சியாகவே நேபாளத்திற்கான தற்போதைய நிவாரண நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க இந்தியாவுடன் போட்டியிட்டு வரும் சீனாவும் அவசரகால நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவியை ஒருங்கிணைத்து வருவதாக அந்நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.
எனினும், சீனாவின் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கான நடைமுறைகள் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
