சென்னை: தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு இல்லாத நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர வருமானத்தில் பெரும் பகுதி உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே செலவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, விலைவாசி உயர்வை அரசு சாதாரண விலை உயர்வாக பார்க்காமல், பொதுமக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கியப் பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பொருளாதார நெருக்கடியின்றி நிம்மதியாகவும் கண்ணியமாகவும் வாழும் சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.
