சமூக வலைதள செயல்பாட்டில் பிரதமர் மோடி முதலிடம்
புதுடில்லி: இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களின் சமூக ஊடக செயல்பாடுகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இளைஞர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மே 1 முதல் ஆகஸ்ட் 15 வரை அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு அமைச்சரிடமும் வழங்கப்பட்டது. இந்த மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் அமைச்சர்கள்
இளைஞர்களிடம் மத்திய அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும் ஒரு மத்திய அமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த பயணங்களின்போது, அரசின் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர்கள் எடுத்துரைப்பார்கள்.
அதே நேரத்தில், நாட்டின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக மாணவர்களின் கருத்துகளையும் அமைச்சர்கள் கேட்டறிய உள்ளனர்.
இந்த பல்கலைக்கழக பயணங்களை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் ஒருங்கிணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
