திருக்கோவில் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம்: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
சென்னை: கோவில்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் வெளிப்படையாக நிரப்பும் வகையில், திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம் இந்த ஆண்டு அமைக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், பழமையான கோவில்களின் புனரமைப்பு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், கோவில் பணியாளர்களின் நலன் மற்றும் கோவில் கல்வி நிறுவனங்களின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
கோவில் புனரமைப்பு பணிகள்
இந்த ஆண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 64 கோவில்களில் ரூ.125 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், சிதிலமடைந்த 150 கோவில்களில் ரூ.85 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 22 கோவில்களில் தேவையான திருப்பணிகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 கோவில்களில் பல்வேறு வகையான மண்டபங்கள் ரூ.21.37 கோடி மதிப்பில் அமைக்கப்படும். குச்சனூர் சனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 8 கோவில்களில் ரூ.22.25 கோடி செலவில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்.
சென்னை கொளத்தூர் சோமநாதர் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் மற்றும் நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகியவற்றில் ரூ.2 கோடி மதிப்பில் 3 புதிய மரத்தேர்கள் உருவாக்கப்படும்.
பக்தர்களுக்கான வசதிகள்
திருச்சி ரங்கநாதர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 105 கோவில்களில் திருக்குள பணிகளுக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் உள்ளிட்ட 3 கோவில்களில் ரூ.11 கோடி செலவில் பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
திருவண்ணாமலை, பழநி, சிறுவாபுரி, இருக்கன்குடி உள்ளிட்ட 22 கோவில்களில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் 20 கோவில்களில் ரூ.3 கோடி செலவில் ஆம்புலன்ஸ்கள் வாங்கப்படும். நீண்ட சுற்றுப்பாதை கொண்ட 38 கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் வாங்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலுக்கு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ரூ.1 கோடி செலவில் 4 மினி பஸ்கள் வழங்கப்படும். நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரூ.1 கோடி செலவில் 2 பஸ்கள் வழங்கப்படும்.
மேலும், 16 கோவில்களில் ரூ.10.25 கோடி மதிப்பில் அன்னதானக் கூடங்கள் அமைக்கப்படும்.
கோவில் பணியாளர்களுக்கு சலுகைகள்
கோவில் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது ஒப்படைக்கும் ஈட்டிய விடுப்பு நாட்களின் உச்சவரம்பு 240 நாட்களாக உயர்த்தப்படும்.
மகப்பேறு விடுப்பும் 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்படும்.
கோவில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் திருமணத்திற்கான கடன் தொகையும் உயர்த்தப்படும். முதுநிலை கோவில் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத கோவில் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் திருமணக் கடன் வழங்கப்படும்.
கோவில்கள் நடத்தும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது கோவில் பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமையுடன் 50 சதவீத கட்டணச் சலுகையும் வழங்கப்படும்.
புதிய தேர்வு வாரியம்
கோவில்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் மூலம் வெளிப்படையாக பணியாளர்களை தேர்வு செய்யும் வகையில், திருக்கோவில் பணியாளர் தேர்வு வாரியம் இந்த ஆண்டு அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்வி மற்றும் ஆன்மிக திட்டங்கள்
கோவில்களால் நடத்தப்படும் 4 பள்ளிகளில் சுகாதார வளாகம், குடிநீர் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த ரூ.5.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடு கோவில்களை முன்மாதிரி கோவில்களாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கிராம தெய்வங்களின் வழிபாட்டு மரபை போற்றும் வகையில் கிராம திருவிழாக்களும், அனைத்து மண்டலங்களிலும் கூத்து, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கிராமிய விழாக்களும் நடத்தப்படும்.
15 கோவில்களில் கோவில் வளாகத்திலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டம் மேம்படுத்தப்படும். மேலும், 1,000 மூத்த குடிமக்களுக்கு முக்கிய கோவில்களுக்கான ஆன்மிகப் பயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
கோவில் நிலங்களில் அடர்வனம் மற்றும் நந்தவனங்கள் அமைக்கப்படுவதுடன், சித்தர்களின் பெருமையை போற்றும் வகையில் விழாக்களும் நடத்தப்படும். காமராஜர் பிறந்த நாளில் கோவில்களில் பொது விருந்து ஏற்பாடு செய்யப்படும்.
மருதமலை மற்றும் அழகர்கோவில் சார்ந்த பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. பழநி கோவில் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.3.10 கோடியில் 9 புதிய பஸ்கள் வாங்கப்படும்.
மேலும், யானைகள் புத்துணர்வு மற்றும் நல்வாழ்வு முகாம் மீண்டும் நடத்தப்படும். கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றங்கரையில் ரூ.3 கோடி செலவில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கருணை இல்லத்தில் கூடுதல் அறை மற்றும் நவீன சமையல் கூடம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் ரமேஷ் வெளியிட்டார்.
