புதுடில்லி: ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தாமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநில அரசு தவறினால் துணை ராணுவப் படையினரின் உதவியை பயன்படுத்த நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேகமலை, வருஷநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வன ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் ஆய்வில், 4,600-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் 5,000 ஹெக்டேருக்கும் அதிகமான வன நில ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை காலக்கெடுவுக்குள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு கூடுதல் கால அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தாமதம் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள இலவம்பஞ்சு தோட்டங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வனப்பகுதிகளில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத ரிசார்ட்டுகள் மற்றும் சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை செயல்படாதவையாக மாற்றி, அவற்றை சட்டப்படி அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசு முறையாக செயல்படுத்தத் தவறினால், மத்திய அரசால் அதிகாரமளிக்கப்பட்ட குழு துணை ராணுவப் படையினரை பணியில் ஈடுபடுத்த பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
