காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதார் முக்கிய பங்கு வகித்தார். அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
காலே மைதானத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. இதில் தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி 167 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தினுஷா 100 ரன்களும், டிக்வெல்லா 80 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் 66, தேவ்தத் படிக்கல் 44 மற்றும் கே.எல்.ராகுல் 35 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து இலங்கை அணிக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது நாள் ஆட்டம் தொடங்கியதும், இலங்கை வீரர்களால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. டி சில்வா 59 ரன்களும், தினுஷா 84 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால், இலங்கை அணி 206 ரன்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த மனவ் சுதார் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
