புதுடில்லி: சைபர் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் போலி சிம்கார்டுகள் மூலம் நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சிம்கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக சைபர் குற்றங்கள், டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டுகள் பெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
இந்நிலையில், சிம்கார்டு வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் விவரங்களை சரிபார்ப்பதற்கான நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள் என்ன?
- சிம்கார்டு வாங்கும் நபரின் விவரங்கள் உடனடியாக சரிபார்க்கப்பட வேண்டும்.
- தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
- ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்.
- வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6 சிம்கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.
- சிம்கார்டு தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் இண்டலிஜென்ஸ் பிளாட்பார்ம் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும்.
போலி அடையாளங்களை பயன்படுத்தி சிம்கார்டுகளை வாங்கி சைபர் மோசடிகளில் ஈடுபடுவதை தடுப்பதுடன், மோசடி வழக்குகளில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களை விரைவாக கண்டறிவதற்கும் இந்த நடவடிக்கைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
