வாஷிங்டன்: இந்தியாவின் தேர்தல் நடைமுறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருடனான தொடர்பை சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் சமீபத்தில் அமெரிக்க நிர்வாகத்திடம், செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும் என கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாகவும், அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களித்ததாகவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய தேர்தல் நடைமுறையில் ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தை வைத்திருப்பது கட்டாயமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்கு கட்டாய புகைப்பட அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக ‘Save America Act’ சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
‘Save America Act’ என்ன?
இந்த சட்ட முன்மொழிவின்படி, அமெரிக்க தேர்தல்களில் வாக்களிக்க பதிவு செய்யும் நபர்கள் செல்லுபடியாகும் அடையாள ஆவணத்துடன், அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்பட்ட நிலையில், தபால் மூலம் வாக்களிப்பதை கட்டுப்படுத்தவும் சட்டம் முயற்சிக்கிறது. குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் இது முன்வைக்கிறது.
கூட்டாட்சி தேர்தல்களில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தல் மோசடிகளைத் தடுப்பதற்கு இந்த சட்டம் அவசியம் என்றும் டிரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
