புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தனது பதவிக்கு ஏற்ற வகையில் செயல்படவில்லை என மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய கிரண் ரிஜிஜு, ராகுலுடன் தனிப்பட்ட முறையில் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், இருவரும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரிய பதவியில் இருப்பவர் அதற்குரிய கண்ணியத்தையும் மரியாதையையும் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அவையில் பேசும்போதும் அதற்கேற்ற பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ராகுலுக்கு அறிவுறுத்தினார்.
ராகுல் கடைப்பிடிக்கும் பாணியின் தாக்கம் அவரது கட்சி எம்.பி.க்களிடமும் காணப்படுவதாக குறிப்பிட்ட ரிஜிஜு, அவையில் கூச்சல், ரகளை மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்றார்.
பார்லிமென்டில் விவாதங்களில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் அரசு பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், அரசு ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கவும், தேவையான விளக்கங்களை அளிக்கவும் தயாராக இருந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சி விவாதத்தை எதிர்கொள்ளாமல் பல்வேறு காரணங்களை முன்வைத்து விலகியதாகவும் ரிஜிஜு தெரிவித்தார்.
பிரதமரை விமர்சிக்கும் வகையில் ராகுல் நாடகத்தனமாக செயல்பட முயன்றதாகவும், அதன் மூலம் அவரே கேலிக்குரிய நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கிரண் ரிஜிஜு விமர்சித்தார். இதனால் ராகுலின் சொந்த நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
