சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயின் அலுவலக அறை மாற்றப்படுவது தொடர்பாக சட்டசபையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பேசுகையில், முதல்வரின் புதிய அறைக்கான பணிகள் முடிந்த பிறகே ஆன்லைனில் டெண்டர் வெளியிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும், முதல்வர் அறையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு கேள்வி எழுப்புவதாகவும், டெண்டர் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் விஜய் தனது வசதிக்காக மட்டும் அலுவலகத்தை மாற்றவில்லை என்றும், அவரைச் சுற்றி பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் தனிச் செயலர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவே இந்த தற்காலிக இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
முதல்வரின் தனிச் செயலர்கள் 100 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் பணியாற்றுவதாகவும், அங்கு போதிய கழிப்பறை வசதி கூட இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனை நேரில் வந்து பார்க்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கும் இருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முதல்வர் விஜய் தினமும் அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து வருவதால், அனைவரையும் சந்திப்பதற்கு ஏற்ற வசதியான இடம் தேவைப்படுவதாக விளக்கம் அளித்தார்.
பிரசார காலங்களில் எளிமையாக செயல்பட்ட முதல்வர் விஜய் குறித்து தவறான தகவல்களை சட்டசபையில் தெரிவிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறையில் வெள்ளை அறிக்கை
இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். கடந்த 60 நாட்களில் 20-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மீண்டும் புதிய டெண்டர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 20 முதல் 36 சதவீதம் வரை குறைந்த மதிப்பில் டெண்டர்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
