வாஷிங்டன்: உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை அமெரிக்காவின் புதிய மாகாணமாக அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல் வழித்தடத்தை ஈரான் கட்டுப்படுத்தியதால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியிருந்தார். ஈரானை முழுமையாக தோற்கடித்த பின்னர் இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அமெரிக்காவின் புதிய மாகாணம் என டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது பதிவில் ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ள பகுதியை வட்டமிட்டு அடையாளப்படுத்திய வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை சமூக வலைதள பதிவு, விமானம் தாங்கி கப்பல் அல்லது பேச்சு மூலம் கைப்பற்ற முடியாது என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
