சென்னை: தமிழக அரசின் காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் தெரிவித்தார். மேலும், காமராஜர் பெயரை விட இந்த திட்டத்திற்கு பொருத்தமான பெயர் உலகிலேயே கிடையாது என்றும் அவர் கூறினார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எம்எல்ஏ எ.வ.வேலு பேசினார். இதற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ராஜ்மோகன் பதிலளித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், எ.வ.வேலு பல்வேறு கருத்துகளை முன்வைக்கும் போது பொதுக்கூட்டத்தில் பேசுவது போன்று அரசு செய்த திட்டங்களை பட்டியலிடுவதாகவும், மானியக் கோரிக்கை விவாதத்தில் உரிய கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன என எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் முதல்வர் கருணாநிதியை தாங்கள் மதிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், அரசு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வது காலம் காலமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு உதாரணமாக, ‘அம்மா பசுமை இல்லம்’ ‘கருணாநிதி கனவு இல்லம்’ எனவும், ‘அம்மா மருந்தகம்’ ‘முதல்வர் மருந்தகம்’ எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயரிலேயே காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ரூ.232 கோடியே 72 லட்சம் செலவில் காலை உணவு திட்டம் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகிலேயே கிடையாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
