சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் ஒரே நிறுவனத்துக்கு தொடர்ந்து வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்களை கோவில் நிர்வாகம் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐந்தாம் பிரகாரம் பழுதுபார்த்தல், நகரும் தடுப்புகள் அமைத்தல், கற்பூர விளக்கு ஏற்றுவதற்கான இரும்பு மேடை அமைத்தல், மகளிர் கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மின்சாரப் பணிகள், மரங்களை சுற்றி பாதுகாப்புச் சுவர்கள் அமைத்தல், கழிவுநீர் தொட்டி மற்றும் நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப் பணிகள் ‘அஸ்வினி கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கோரிக்கை
இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர். ரமேஷ் சில தகவல்களை கோரி விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் கேட்ட தகவல்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து டி.ஆர். ரமேஷ் கூறுகையில், கோவில் நிர்வாகிக்கு நெருக்கமானதாக கூறப்படும் நிறுவனத்துக்கு தொடர்ந்து ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் தகவல்கள் கோரியபோதும், அவற்றை வழங்க கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கோவில் நிர்வாகம் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் பல்வேறு ஆர்.டி.ஐ. மனுக்களுக்கும் முறையான தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
