சென்னை: கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான பாடங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வளாகங்களை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு ‘நஷா முக்த் பாரத் அபியான்’ என்ற போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆறு பிரிவுகளில் பாடத்திட்டம்
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவு பாடத்திட்டம் மொத்தம் ஆறு முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதில்,
- போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை புரிந்துகொள்ளுதல்
- போதைக்கு அடிமையாதலின் பின்னணியில் உள்ள அறிவியல்
- போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
- போதைப்பொருட்களை கண்டறிதல் மற்றும் அதற்கான தீர்வுகள்
- போதைப்பொருள் ஒழிப்பில் இளைஞர்களின் பங்களிப்பு
- போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகள்
ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பொதுமக்களிடம் கருத்து கேட்பு
இந்த வரைவு பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், தொழில்துறை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை அடுத்த 15 நாட்களுக்குள் யுஜிசிக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
