ஜார்க்கண்டில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சட்டசபை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17வது நாளை எட்டிய போராட்டம்
தேர்வு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ராஞ்சியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 10ஆம் தேதி போராட்டத்தின் 17வது நாளில் மாணவர்கள் சட்டசபையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
பேரணியை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில், மாணவர்கள் அந்த தடுப்புகளை மீறி முன்னேறிச் சென்றனர்.
தடியடி; கண்ணீர் புகை குண்டு வீச்சு
இதையடுத்து போலீசார் மாணவர்களை கலைக்க தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இதனால் சட்டசபை அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசாரின் நடவடிக்கையையும் மீறி மாணவர்கள் தொடர்ந்து முன்னேறி சட்டசபையை நெருங்கிச் சென்றனர்.
மாணவர்கள் சட்டசபை அருகே சென்றதால், சட்டசபை நடவடிக்கைகள் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டன.
