2026 காமன்வெல்த் போட்டியின்போது இந்திய வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைனை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் தங்கியிருந்த உணவகத்தில் இந்தியாவின் வரைபடம் இடம்பெற்றிருந்தது. அதில் வடகிழக்கு மாநிலங்கள் இடம்பெறாமல் இருந்ததை லவ்லினா கவனித்துள்ளார்.
உணவக நிர்வாகத்திடம் எதிர்ப்பு
இந்திய வரைபடத்தில் ஏற்பட்டிருந்த தவறை உடனடியாக உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற லவ்லினா, இதற்கு தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார்.
இதையடுத்து, உணவக நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டு, வரைபடத்தை சரிசெய்வதாக தெரிவித்ததுடன், லவ்லினாவிடம் மன்னிப்பும் கோரியது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோ வெளியாகி கவனம் பெற்ற நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டினார்.
லவ்லினாவிடம் மோடி பாராட்டு
75 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினாவை சந்தித்த பிரதமர் மோடி, உணவக நிர்வாகத்திடம் வரைபடம் தொடர்பாக அவர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது, “நீங்கள் அந்த ரெஸ்டாரன்ட் நிர்வாகத்துடன் சண்டை போட்டீர்களா?” என நகைச்சுவையாக பிரதமர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த லவ்லினா, அனைவரும் கொண்டாட்டத்தில் இருந்தபோது தவறாக சித்தரிக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தை பார்த்ததாகவும், உடனடியாக தனது ஆட்சேபனையை தெரிவித்ததாகவும் கூறினார். பின்னர் உணவக நிர்வாகம் வரைபடத்தில் திருத்தம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“உங்கள் விழிப்புணர்வை பாராட்டுகிறேன்”
இதையடுத்து லவ்லினாவின் விழிப்புணர்வு மற்றும் தேசப்பற்றை பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்திய வரைபடத்தை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணவக நிர்வாகத்திடம் அவர் பேசியதை பாராட்டுவதாகவும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நீண்ட காலத்திற்கு மக்களின் நினைவில் இருக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
